தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-12 19:42 GMT
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
சேலம் 4 ரோட்டில் பெரமனூர் நாராயணபிள்ளை தெரு உள்ளது. இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையின் ஓரத்தில் கொட்டி வைத்துள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் குப்பைகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நோய் பரவும் முன்பாக இந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பெரமனூர், சேலம்.
மழைக்கு ஓழுகும் பஸ் நிலைய கடைகள்
தர்மபுரியில் புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையம் அருகருகே அமைந்துள்ளன. இந்த பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றை வாடகைக்கு எடுத்து இருப்பவர்கள் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக  அவற்றில் சில கடைகளில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இந்த கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு  உள்ளாகி வருகிறார்கள். எனவே பஸ் நிலைய கடைகளில் மழைநீர் ஒழுகுவதை தடுக்க உரிய சீரமைப்பு பணி செய்யப்படுமா?
-மணி, தர்மபுரி.
தேங்கி நிற்கும் மழைநீர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா நல்லூரில் ரேஷன் கடை முன்பு தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கி  நிற்கிறது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களும், வயது முதிர்ந்தவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த  பகுதி சேறும், சகதியுமாக உள்ளதால் சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைகிறார்கள். தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள்  உற்பத்தியாவதுடன், கோழிகள், வாத்துகள் ஆனந்த குளியல் போடுகின்றன. பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடை  முன்பு மண்ணை கொட்டி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், நல்லூர், நாமக்கல்.
வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல்வேறு தேவைக்காக ஏரியூர் நகர்ப்பகுதிக்கு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதற்கி்டையே பஜார் பகுதியில் உள்ள கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதற்காக வருகை தரும் கனரக வாகனங்களை, சாலை ஓரங்களில் நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர். அப்படி நிறுத்தப்படும் வாகனங்கள் கடை வீதிகளில் இருபுறமும் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கிடையே சில தள்ளுவண்டி கடைகளும் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏரியூர் நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வாகனங்களால் விபத்துக்களும் நடக்கின்றன. எனவே ஏரியூர் நகர்ப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஏரியூர். தர்மபுரி.

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?
 சேலம் 4 ரோடு நாராயணபிள்ளைதெரு காமராஜர் காலனி பின்புறம் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக மின்மோட்டார் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு உள்ளது. மேலும் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் பழுது  ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் குழாயை சரிசெய்வதற்காக அந்த பகுதியில் குழி தோண்டப்பட்டது. அந்த குழாயும் சரிசெய்யப்படவில்லை. தோண்டப்பட்ட குழியும் மூடப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் அந்த குழியில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த குடிநீர் குழாயை சரிசெய்வதுடன், குழியையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், நாராயணபிள்ளை தெரு, சேலம்.

மேலும் செய்திகள்