தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது-50 பவுன் மீட்பு

தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட 10 பேரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-11-12 18:19 GMT
நாமக்கல்:
நகை பறிப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி கீதா (வயது 47) என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். மறுநாள் 30-ந் தேதி நாமக்கல்லில் சரோஜா (59) என்பவரிடம் 8 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், வேலுத்தேவன், சந்திரகுமார், பாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து 3 நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனிடையே பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணித்த போலீசார், அவர்களின் செல்போன் எண்களின் செயல்பாடுகளையும் கண்காணித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
3 பேர் கைது
 இந்தநிலையில் சென்னையை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற சம்பவம் தினேஷ்குமார் (31), உத்தரமேரூரை சேர்ந்த சசிகுமார் (22), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (22) ஆகியோர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் மூவரும் சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், திண்டிவனம், கும்பகோணம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், சின்னசேலம், செஞ்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாமக்கல், பள்ளிபாளையம், கரூர் மற்றும் புதுச்சேரி உள்பட 20 இடங்களில் பெண்களிடம் நகைகளை பறித்து சென்றது தெரிந்தது.
50 பவுன் பறிமுதல்
மேலும் நகைகளை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ததோடு, சிலவற்றை உருக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அளித்த தகவலின்பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 பவுனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அருள், செல்வம், முருகேசன், மணி, சதீஷ், செல்லம்மாள், மதுரைவீரன் ஆகிய 7 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்