3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கைதான விருத்தாசலம் பள்ளி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு சென்று நீதிபதி உத்தரவு
3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான விருத்தாசலம் பள்ளி தாளாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. நெஞ்சுவலிக்காக அவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு சென்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடலூர்,
கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீராரெட்டிக்குப்பத்தில் தனியார் சிறுவர், சிறுமியர் இல்லம் மற்றும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது. இங்கு ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி பள்ளியில் படித்த மாணவிகள் 3 பேர் மாயமானார்கள்.
இது பற்றி பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா (வயது 65) என்பவர் ஆலடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த மாணவிகள் 3 பேருக்கும் பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பள்ளியில் இருந்த 40 சிறுமிகளை போலீசார் மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். பள்ளியில் இருந்த முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆஸ்பத்திரிக்கு வந்த நீதிபதி
இதையடுத்து அவரை கடந்த 10-ந்தேதி கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை பிரிவில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் தகுதி சான்றிதழை டாக்டர்கள் வழங்கவில்லை.
இந்நிலையில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாததால், அவரை சிறையில் அடைக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் ஜேசுதாஸ்ராஜா சிகிச்சை பெற்று வரும் இடத்திற்கு சென்று, அவரிடம் விசாரித்தார். தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர் அரசு ஆஸ்பத்திரி கைதிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் நீதிபதி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து நீதிமன்ற காவல் வழங்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.