தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனித்தனியாக நடைபெற்ற விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலியானார்கள்
உளுந்தூர்பேட்டை
பெண் தொழிலாளி
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி ராதா(வயது 50). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அதே பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர் பகுதியில் தனது பசுமாட்டை கட்டிப்போட்டு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ராதா மற்றும் அவரது பசுமாடு மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராதா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது பசுமாடும் இறந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பசுமாட்டையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையின் தடுப்புசுவர் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் கார் மோதி பலியான சம்பவம் சின்னகுப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பஸ்
திருவண்ணாமலையிலிருந்து நேற்று முன்தினம் மதியம் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு திருக்கோவிலூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் சிவா(வயது 29) என்பவர் பஸ்சை ஓட்டினார். ப.அத்திப்பாக்கம் காட்டுகோவில் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த கண்டாச்சிபுரம் தாலுகா ஆதிச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மனைவி மனோன்மணி(50) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த களம்பூர் சீனுவாசன், வடகரை தாழனூர் புஷ்பா, ஆவியூர் சங்கர், வாசுகி, காட்டு எடையார் சக்திவேல், திருவண்ணாமலை ராஜேஷ்குமார் உள்பட 16 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி பலி
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவேரியார்பாளையம் மெயின் ரோட்டை சோந்தவர் சூசை(வயது50). விவசாயியான இவர் இளையாங்கண்ணி கூட்டுரோட்டு சாலையில் இருந்து சவேரியார்பாளையத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த சூசை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.