தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-11-12 16:31 GMT
மின்விளக்குகள் ஒளிருமா?
மயிலாடுதுறை மாவட்டம் நல்லடை சாலை வழியாக ஐஸ்வர்யம் நகர், பரசலூர் வரை பொதுமக்கள் மற்றும், வாகன ஓட்டிகள் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது இந்த மின்விளக்குகள் பராமரிப்பின்றி சரிவர எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் மேற்கண்ட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின் விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், பரசலூர்.
மின்விளக்கு வசதி வேண்டும்
நாகை மாவட்டம் கீழ்வேளூர்-கோகூர் செல்லும் சாலை மற்றும் வெள்ளை திடல் - நான்குடி வரை உள்ள பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருள் சூழ்ந்து கிடப்பதால் சமூக விரோதிகள் வாகனங்களில் வழிப்பறியில் ஈடுபடும் அபாயம் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கீழ்வேளூர்.
பன்றிகள் தொல்லை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதி பூந்தோட்டம் அருகே 34 கூத்தனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களை அவ்வப்போது விரட்டி சென்று கடித்து விடுகின்றன. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 34 கூத்தனூர் கிராமத்தில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-கார்த்திகேயன், திருவாரூர்.
தொற்று நோய் பரவும் அபாயம்
திருவாரூர் நகர் பகுதியில் உள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடி திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சிறுவர்கள், பெண்கள், முதியவர்களை விரட்டி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். பன்றிகள் சுற்றித்திரிவதால் திருவாரூர் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் நகர் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-ரவிச்சந்திரன், திருவாரூர்.
சேறும், சகதியுமான சாலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள பன்னாள் கிழக்கு உண்டியலடியில் இருந்து உப்பு தொழிற்சாலைக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
பொதுமக்கள், வேதாரண்யம்.
சாலை வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள வேலூர் சிவன் கோவில் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சேறும், சகதியுமான பாதையினால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேலூர் சிவன் கோவில் பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.

மேலும் செய்திகள்