வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 2 பேர் பலி
சின்னசேலம்
சின்னசேலம் அருகே ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது 48). சின்னசேலம் அண்ணாநகர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று இரவு கனியாமூரைச் சேர்ந்த தனது நண்பர் ராஜவேலுவுடன் மோட்டார் சைக்கிளில் கனியாமூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில்பாடி பிரிவு ரோட்டில் வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரி முத்துவேல் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். லேசான காயத்துடன் ராஜவேல் உயிர்தப்பினார். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வள்ளிமதுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த அய்யாவு(56). இவர் சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி(50), சுகுமார்(37) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சேலம்-விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தா சமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அய்யாவு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யாவு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த மூர்த்தி, சுகுமார் ஆகியோர் காயமடைந்தனர். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.