மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பயணியர் நிழற்குடை மீது வேருடன் சாய்ந்த மரம்
மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் ளியமரம் ஒன்று கனமழையின் காரணமாக வேருடன் சாய்ந்து சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை மீது விழுந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் உள்ள நெடுஞ்சாலை ஓரம் உள்ள பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று கனமழையின் காரணமாக வேருடன் சாய்ந்து சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை மீது விழுந்தது. இதன் காரணமாக அந்த பயணியர் நிழற்குடை முழுவதுமாக இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
நல்ல வேளையாக அதில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதன் காரணமாக அந்த புளிய மரத்தின் ஒரு பகுதி திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையான மேல்நல்லாத்தூர் சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிபாபு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பில்லா என்ற சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரக்கிளைகளை முழுவதுமாக அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னர் அந்த வழியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.