கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி

கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2021-11-12 14:16 GMT
குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம், கூடுவாஞ்சேரி, கல்வாய், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஒருசில ஏரிகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் வழியாக செல்வதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

இந்த கனமழையின் காரணமாக நந்திவரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. மேலும் பல வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்து விட்டது.

மழை நீருடன் பாம்புகள், விஷபூச்சிகளும் வீடுகளுக்கு படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதேபோல் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள செல்வராஜ் நகர், எம்.ஜி.நகர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

ஏரியில் கழிவுநீர் கலக்கிறது

இதே போல் பெருமட்டுநல்லூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த ஏரி நிரம்பி உள்ளதால் இதனை பயன்படுத்தி வீடுகளில் இருந்து லாரி மூலம் எடுக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை சமூக விரோதிகள் ஏரியில் விடுகின்றனர். இதனால் இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தும் கூடுவாஞ்சேரி பேரூராட்சி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும். மேலும் ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியை ஒட்டியுள்ள நகர் பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. ஏரியின் மற்றொரு புறத்தில் உள்ள கன்னிவாக்கம் சாந்தா தேவி நகர் பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்து விட்டது. மேலும் ஏராளமான பாம்புகள் வீடுகளுக்கு செல்வதால் அச்சத்துடன் உள்ளனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

மேலும் கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் கூடுவாஞ்சேரி கொட்டமேடு சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல்வேறு ஏரிகள் நிரம்பி இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஏரிக்கு நேரில் ஆய்வு செய்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு கிராமங்களில் மழை நீர் வீடுகளில் புகுந்து உள்ளது.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பி.டி.சி. குடியிருப்பு, பரத்வாஜ்நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் புவனேஸ்வரி நகர். மகாலட்சுமி நகர் போன்ற பகுதிகளில் அடையாற்றின் கரையை தாண்டி வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

அடையாற்றின் கரையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு கரையின் உயரம் குறைவாக உள்ள பகுதியில் கரையை உயர்த்தி போதிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

குட்டி தீவு போல்

அடையாறு ஆற்றின் கரையில் இருந்து தற்போது வெளியேறும் தண்ணீரை மணல் மூட்டைகள் வைத்து தடுக்க போதிய நடவடிக்கை எடுத்த போதிலும் எந்த பலனும் இல்லை.

இரவு நேரம் நெருங்கி விட்டதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் காலையில்தான் மீண்டும் பணி தொடங்கும் என பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதராஜபுரம் ஊராட்சி குட்டி தீவு போல் காட்சி அளிக்கிறது.

குடியிருப்புகளில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்குவதற்கு போக முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை பேரிடர் மீட்புகுழுவினர் ரப்பர் படகு மூலம் மீட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்