சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-11-12 12:23 GMT
ஊட்டி

ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் வீடு இடிந்ததோடு, மின்கம்பங்கள் சாய்ந்தன.

தொடர் மழை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் செல்லும் சாலையின் குறுக்கே மரம் வேருடன் முறிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டி அருகே தாவணெ செல்லும் சாலையில் பலத்த காற்று வீசியதால் 2 மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 2 மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி சாட்லைன் பகுதியில் வீடுகளை ஒட்டி கட்டப்பட்டு இருந்த கற்களால் ஆன தடுப்புச்சுவர் இடிந்து நடைபாதையில் விழுந்தது.

சாலையில் மண்சரிவு

இதனால் நடைபாதையில் கற்கள் குவிந்து கிடந்தது. நள்ளிரவில் இடிந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், வளர்ப்பு நாய் ஒன்று இறந்தது. ஒரு வீடு அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். ஊட்டி-கோத்தகிரி சாலை மேல்கோடப்பமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. சாலையோரத்தில் மண் சரிந்து உள்ளதால், சிறிது இடம் அந்தரத்தில் தொங்குவது போல் காட்சி அளிக்கிறது. ஊட்டியில் நேற்று மதியத்துக்கு மேல் வெயில் அடித்தது. பின்னர் சாரல் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

சூறாவளிக்காற்று வீசியது

கோத்தகிரி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியதோடு லேசான மழை பெய்தது. இதனால் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் அருகே விண்டிகேப் சாலையின் குறுக்கே ராட்சத அளவிலான யூகலிப்டஸ் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின் வாளால் வெட்டி பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் மரம் சரிந்து விழுந்ததில் கோத்தகிரியில் இருந்து கோடநாட்டிற்கு  உயர் மின்னழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது. மின்சார வினியோகத்தை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு பிற புதிய மின்கம்பம் அமைத்து, அறுந்த மின்கம்பிகளை மாற்றியமைத்தனர். 

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து மின்சார வினியோகம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் செல்லும் சாலை ஓரத்தில் மின்கம்பிகள் மீது சரிந்து விழுந்த மரத்தின் கிளைகளை மின் இணைப்பை துண்டித்து, தீயணைப்புத்துறையினர் மின்வாளால் வெட்டி அகற்றினர். சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடு இடிந்தது- பெண் தப்பினார்

கோத்தகிரி அருகே கேரடா மட்டம், வெற்றி நகரைச் சேர்ந்த வீரமலை என்பவரது வீடு நேற்று பெய்த மழை காரணமாக இடிந்தது. அப்போது வீட்டிற்குள் இருந்த வீரமலையின் மனைவி சீதாலட்சுமி இடிபாடுகளுக்குள் சிக்கினார். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 
இது குறித்து தகவலறிந்த நெடுகுளா வருவாய் அலுவலர் சகுந்தலை, கிராம நிர்வாக அலுவலர் பியூலா, கிராம உதவியர் அஜ்மீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்து பாதிக்கபட்டவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையான 5 ஆயிரம் ரூபாயை சீதாலட்சுமிக்கு கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் வழங்கினார். தொடர்ந்து வீட்டை இழந்து தவித்த அவர் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டார்.

பந்தலூரில் பலத்த மழை

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை தேவாலா, உப்பட்டி, சேரங்கோடு, சேரம்பாடி, எருமாடு, தாளுர் உள்பட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் வீசியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-52, நடுவட்டம்-20, கல்லட்டி-23, கிளன்மார்கன்-19, கேத்தி-16, குன்னூர்-2, கோத்தகிரி-20, கோடநாடு-30 உள்பட மொத்தம் 241.5 மழை பதிவாகி உள்ளது. 

மேலும் செய்திகள்