வேப்பம்பட்டு ரெயில் நிலைய தண்டவாளத்தில் வேருடன் சாய்ந்த மரம் - 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேப்பம்பட்டு ரெயில் நிலைய தண்டவாளத்தில் வேருடன் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்றும் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 8 மணி அளவில் இலவ மரம் ஒன்று வேருடன் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது.
மரக்கிளையால் ரெயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அகற்றும் பணியையும், அறுந்து விழுந்த ரெயில்வே மின்கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணியில் துரிதமாக செயல்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து ரெயில்வே ஊழியர்கள் மின் கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி அனுபப்பட்டன.
ரெயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் பயணிகள் அவதிப்பட்டனர். அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் மரம் முழுவதுமாக அகற்றப்பட்டு அறுந்து விழுந்த மின் கம்பியை சீர் செய்த பின்னர் திருவள்ளூரில் இருந்து சென்னை மார்க்கமாக ரெயில் போக்குவரத்து சீராக செயல்பட்டது.