கொதிக்க வைத்து குடிநீரை குடிக்க வேண்டும்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். கொதிக்க வைத்து குடிநீரை குடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். கொதிக்க வைத்து குடிநீரை குடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குடிநீர் ஆய்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அவர்கள் உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றிலும், மழை காலமாக இருப்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தந்த உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொது சுகாதார துறை பிரதிநிதிகளுடன் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக வழங்கப்படுவது குறித்து குளோரினேசன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொதிக்க வைத்து...
உணவகங்கள், சாலையோர கடைகளில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து அதன் அறிக்கையை உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிக்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. சேமிக்கும் தண்ணீரை மூடி போட்டு பாதுகாக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பருவமழை, கனமழை காலங்களில் வாந்தி, பேதி போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் குடிநீரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து குடிக்க வேண்டும்.
இறைச்சி, மீன்களை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். கடந்த மாதம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 25 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் மொத்தம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மழைக்காலங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் சூடான உணவை விற்பனை செய்ய வேண்டும்.
கலப்பட உணவு
உணவு சார்ந்த வியாபார நிறுவனங்களின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வகையில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். கலப்பட உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.