முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்

முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

Update: 2021-11-11 22:03 GMT
சென்னிமலை
முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
மகா மாரியம்மன் கோவில்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா மற்றும் பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து தினமும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. 
தேரோட்டம்
கடந்த 9 -ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் இரவு 8.30 மணி அளவில் மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து காளிக்காவலசு, முருங்கத்தொழுவு பகுதி பெண் பக்தர்கள், மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து மாவிளக்கு பூஜை நடத்தினார்கள். 
நேற்று காலை 7 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பொங்கல் விழா
பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவு 7 மணிக்கு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) பகல் மஞ்சள் நீர் உற்சவத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. 
இதேபோல் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

மேலும் செய்திகள்