கோவில்களை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை
கோவில்களை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையான் கோவிலில் தொடர்ந்து 3-வது முறையாக சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் ஏற்கனவே சிறுவாச்சூரில் சாமி சிலைகள் உடைப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, சிதம்பரம் அருகே உள்ள கால்நாட்டான்புலியூரை சேர்ந்த நடராஜன் என்ற நாதன் (வயது 42), கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதையடுத்து போலீசார் கோவில் அருகே ரோந்து சென்றபோது, அங்கே பதுங்கியிருந்த நாதனை பிடித்து விசாரித்தனர். இதில் நாதனுக்கு, மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நாதனை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு அவர் சாப்பிட மறுத்ததால் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று அதிகாலை மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான மலையில் உள்ள கோவில்களில் மின்சார வசதி இல்லாததாலும் மற்றும் தனி ஒருவர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிக்கு இரவு காவலுக்கு செல்ல பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் கோவில் சிலைகளின் பாதுகாப்பு கருதி பெரியசாமி, செல்லியம்மன் வகையறா கோவிலை சுற்றி ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், செங்கமலையான் மற்றும் ஆத்தடியான் கோவிலை சுற்றி ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.