சுகாதார சீர்கேடு
சேலம் ரத்தினசாமிபுரம் காளியம்மன் கோவில் அருகில் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை. அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர். அந்த பள்ளங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்கின்றன. எனவே இந்த பிரச்சினைகளை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ரத்தினசாமிபுரம்.
நாய்கள் தொல்லை
சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட மணக்காடு, ராஜகணபதி நகர், அன்பு நகர், ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளியே செல்லும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, அங்கு சுற்றிதிரியும் தெரு நாய்களை பிடிக்கவும், கட்டப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, மணக்காடு, சேலம்.
சாலையில் தேங்கிய கழிவுநீர்
கிருஷ்ணகிரியில் ரவுண்டானா அருகில் பெங்களூரு சாலையில் கமர்சியல் தெரு அமைந்துள்ளது. வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த தெருவில் செல்போன் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பிரிண்டிங் கடைகள், மளிகை கடைகள் என ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிக்கு தினமும் ஆயிரக்கணககான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதிலும் ஆங்காங்கே பள்ளங்களாக சாலை காட்சி அளிக்கிறது. அந்த பள்ளங்களில் மழைநீரும், சாக்கடை கழிவுநீரும் தேங்கி சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வருபவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த மோசமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், நாட்டாண் கொட்டாய், கிருஷ்ணகிரி.
ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் மூக்கனேரி உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஆனால் ஏரியில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆகாய தாமரைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்காரி, சேலம் கன்னங்குறிச்சி
சாலையோர கடைகளால் விபத்து
சேலம் டால்மியா போர்டு சாலையானது அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு செல்லும் முக்கியமான சாலை ஆகும். இந்த சாலை வழியாக வெளிமாநில, மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் சாலையின் ஓரங்களில் சிலர் கடைகளை போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சில சமயங்களில் இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், டால்மியா போர்டு, சேலம்.
பகல் எரியும் தெருவிளக்கு
நாமக்கல் நகரில் இருந்து மரூர்ப்பட்டி செல்லும் வழியில் ராமபுரம்புதூர் உள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள தெரு விளக்கு ஒன்று பகல் நேரங்களிலும் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதனை மின்வாரிய ஊழியர்களிடம் கூறினாலும் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. எனவே மின்விளக்குகள் பகல் நேரங்களில் எரிவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மரூர்ப்பட்டி, நாமக்கல்.
====