மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சூழ்ந்த மழைவெள்ளம்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுவதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நெல்லை:
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சுற்றி மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுவதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாலைகள் சேதம் அடைந்ததால் சிரமங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த மழை தண்ணீர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரியிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் மல்டி ஸ்பெஷாலிட்டி எனப்படும் பன்னோக்கு அரசு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது.
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த ஆஸ்பத்திரியை சுற்றிலும் நடைபாதை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் பேவர் பிளாக் எனப்படும் சிமெண்டு கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இதில் ஏற்கனவே பெரும் பகுதி சேதம் அடைந்து வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வந்தது. இந்த நிலையில் தொடர் மழையால் இந்த பேவர் பிளாக் பாதை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மழைவெள்ளம் குளம் போல் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து தண்ணீர் வடியாமல் கிடப்பதால் பச்சை நிறத்தில் பாசி படர்ந்ததுடன், துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழலும் நிலவுகிறது.
நோயாளிகள் அவதி
இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள், மாத்திரை வாங்க வருவோர் இந்த தண்ணீருக்குள் நடந்துதான் ஆஸ்பத்திரி உள்ளே செல்ல வேண்டி உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள் நலன் கருதி தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்த வேண்டும் என்று நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.