தொடர் மழையால் வீடு இடிந்து முதியவர் சாவு

தொடர் மழை காரணமாக காரைக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் பலியானார்.

Update: 2021-11-11 19:13 GMT
காரைக்குடி, 

 தொடர் மழை காரணமாக காரைக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் பலியானார்.

தொடர் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை ெபய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கண்மாய்கள், ஆறுகள், ஏரிகள் நிரம்பி மறுகால் செல்கிறது. 
 காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தொடர்ந்து இடிந்து விழுந்தன. இதையடுத்து வருவாய்த்துறையினர் நேரடியாக சென்று அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் பலி

இந்நிலையில் காரைக்குடி அருேக உள்ள அரியக்குடி ஸ்ரீனிவாசநகர் பகுதியில் வீரப்பன் (வயது 80) என்ற முதியவர் தனியாக தனது ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக தொடர்ந்து இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால் வீட்டின் மீது மழைநீர் தேங்கி இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீரப்பன் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் உள்புறமாக தூங்கிக்கொண்டிருந்த வீரப்பன் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 
 இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமையிலான வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இறந்த வீரப்பனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்