15-ந்தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்-கலெக்டர் தகவல்

இந்த மாதம் 15-ந்தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-11-11 18:45 GMT
ராமநாதபுரம்,

இந்த மாதம் 15-ந்தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.

பயிர் காப்பீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016-17 சம்பாநெல் பருவம் முதல் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1434.56 கோடி இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
​நடப்பாண்டில் 2021-22 சம்பாநெல் பருவத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

15-ந்தேதிக்குள்..

இந்த திட்டத்தை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சம்பாநெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.326.15 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். காப்பீட்டு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.21,743.32 வரை கிடைக்கும். பிரீமியம் தொகையை இந்த மாதம் 15-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் மூவிதழ் அடங்கல் படிவத்தை பெற்று அத்துடன் விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு விபரம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிர்ணயிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கி கணக்கு உள்ள பொது உடமை வங்கிகளை தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும். 
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்