பேரணாம்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது ஒரே மகன் சுரேந்தர் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறையில் தனது சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். வீட்டின் அருகே உள்ள தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த சுமார் 100 அடி ஆழமுள்ள பொதுக்கிணற்றில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் தண்ணீர் நிரம்பி வந்ததது.
இந்த கிணற்றில் சுரேந்தர் கடந்த இரு தினங்களாக தனது நண்பர்களுடன் குளித்து வந்துள்ளார். நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் சென்று மீண்டும் அதே கிணற்றில் குதித்து நீச்சலடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென எதிர்பாராவிதமாக மயக்கமடைந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார்.
உடன் இருந்த நண்பர்கள் சுரேந்தரை காணாதது கண்டு கூச்சலிட்டு கிராம மக்களை உதவிக்கு அழைத்தனர். கிராம மக்கள் சுரேந்தரை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி சுரேந்தரை பிணமாக மீட்டனர்.
இது சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.