தஞ்சை அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி சாவு மனைவி போலீசில் புகார்

தஞ்சை அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்த விவசாயி வயலில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-11-11 17:42 GMT
திருவையாறு:-

தஞ்சை அருகே நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்த விவசாயி வயலில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 45). விவசாயி. இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை ஒத்திக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அந்த நிலத்தில் நெல் நடவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

வயலில் இறந்து கிடந்தார்

இந்த நிலையில் நேற்று காலை அவர் தான் சாகுபடி செய்திருந்த வயலில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் பாலமுருகனின் மனைவி மரகதம் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வயலில் இறந்து கிடந்த பாலமுருகனின் உடலை பார்த்தனர்.
இது குறித்து மரகதம் நடுக்காவேரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தொடர்மழையால் நாங்கள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டது. இதனால் எனது கணவர் பாலமுருகன் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டதே? என கதறி அழுதார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். இந்த நிலையில் வயலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வயலில் இறந்து கிடந்தார் என கூறி உள்ளார்.

போலீசார் விசாரணை

இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்