வடசேரி பெரியகுளத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வடசேரி பெரியகுளத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-11 17:42 GMT
கரூர்
தோகைமலை
வடகிழக்கு பருவமழையால் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தோகைமலை ஒன்றியம், வடசேரி பெரியகுளம் நிரம்பியது. இதையடுத்து குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து நேற்று காலை அந்த குளத்தை குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில், தமிழக கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டனர். வடசேரி குளத்தின் அருகே உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தரவும், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து மேலவெளியூர் மற்றும் வடசேரி ஊராட்சி காவலன்பட்டி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் புழுதேரி, பாதிரிப்பட்டி ஆகிய குளங்களையும்  பார்வையிட்டனர். அப்போது அனைத்து குளங்களையும், ஆற்றுவாரிகளையும் தூர்வார வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ராமர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். 
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பதேவி, வடசேரி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றும் பணிகளையும், ஜவகர்பஜார் பகுதியில் இரட்டை வாய்க்கால் பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார். 
அப்போது, மாநகராட்சி பகுதிகளில் தொடர்கண்காணிப்பு செய்து பொதுமக்களுக்கு மழைநீரால் இடையூறு ஏற்படாத வகையில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் கிருமிநாசினி தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை அன்றாடம் மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு அறிவுரை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களை கண்காணிப்பு அலுவலர் 2-வது நாளாக நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்