வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் சாவு

திண்டிவனம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட என்ஜினீயரிங் மாணவர் பலியானாா்.

Update: 2021-11-11 17:11 GMT
திண்டிவனம், 

திருக்கோவிலூர் அருகே உள்ள பழனூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் ஜெயக்குமார்(வயது 21). இவர், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் பெரம்பலூரை சேர்ந்த தேவராஜ் மகன் சூர்யா(21) என்பவரும் நேற்று காலை ஓங்கூர் ஆற்றில் குளித்தனர். அந்த சமயத்தில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இருவரையும் அடித்துச்சென்றது. இதில் சூர்யா மட்டும் அதிர்ஷ்டவசமாக கரை ஒதுங்கி உயிர் தப்பினார். ஜெயக்குமார் மாயமானார். 
இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மாணவர் ஜெயக்குமாரை தேடினர். நீண்ட நேரத்திற்கு பின் மாணவர் ஜெயக்குமார் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்