முல்லைப்பெரியாறு அணை விவகாரம் கூடலூரில் அனைத்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் கேரளாவுக்கு நடைபயணம் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூடலூரில் அனைத்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கேரள எல்லையான குமுளியை நோக்கி நடைபயணம் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில அரசை கண்டித்து தேனி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும், பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என்றும், கேரள அரசை கண்டித்தும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
தடுத்து நிறுத்தம்
பின்னர் அவர்கள் தமிழக-கேரள எல்லையான குமுளியை நோக்கி நடைபயணமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். விவசாயிகளை செல்ல விடாததால் அவர்கள் அங்கேயே போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
பேட்டி
பின்னர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் நோக்கத்தோடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக, இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் நோக்கத்தோடு கேரள மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஸி அகஸ்டின், வருவாய்த்துறை மந்திரி ராஜன் செயல்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரையும் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு 2018-ம் ஆண்டில் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளாவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதி கண்டிக்கத்தக்கது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சொகுசு விடுதிகள்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சினை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க கேரள அரசு மறுக்கிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க மத்திய அரசு மறுப்பதன் மர்மம் என்ன? சினிமா நடிகர்கள், கேரள அரசியல்வாதிகள் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் சொகுசு விடுதிகள் கட்டி உள்ளனர். அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கினால் அவர்களது சொகுசு விடுதிகளை தண்ணீர் மூழ்கடித்து விடும். சொகுசு விடுதிகளை பாதுகாப்பதற்காக அவர்கள் அணை பலம் இழந்துள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. சமூக வலைத்தளத்தில் அணை குறித்து தவறான தகவலை பதிவு செய்த கேரள திரைப்பட நடிகர் பிரிதிவிராஜை கைது செய்ய வேண்டும். அணை குறித்து தவறான தகவல்களை பதிவு செய்கிற இணையதளங்கள் முடக்கப்பட வேண்டும்.
மரங்களை அகற்ற வேண்டும்
அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். 999 ஆண்டுகள் குத்தகை உரிமை உள்ள நமக்குத்தான் அங்கு உள்ள மரங்களை வெட்ட அனுமதி உள்ளது. கேரள அரசிடம் அனுமதி கேட்பது தவறு. ரூல்கர்வ் முறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கட்டுப்படுத்தாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக கேரளாவில் உள்ள சதிகாரர்களால் உருவாக்கப்பட்டதுதான் ரூல்கர்வ். மத்திய நீர்வள ஆணையம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்த அனுமதிக்க வேண்டும். பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள மரங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு விவசாயிகளுடன் இணைந்து முல்லைப்பெரியாறு அணையை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழ்நாடு வணிகர்சங்க பேரவை தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், இயற்கை வேளாண் சங்க தலைவர் செந்தில்குமார், கூடலூர் விவசாயிகள் சங்கம் செங்குட்டுவன், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் கொடியரசன், ஜெயபால், 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக கூடலூரில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறுபாதை வழியாக திருப்பி விடப்பட்டது.