உடுமலை வழியாக மதுரைக்கு மீண்டும் ரெயில் இயக்கம்
கோவையில் இருந்து உடுமலை வழியாக மதுரைக்கு மீண்டும் ரெயில் இயக்கம் தொடங்கியது.
உடுமலை
கோவையில் இருந்து உடுமலை வழியாக மதுரைக்கு மீண்டும் ரெயில் இயக்கம் தொடங்கியது.
ரெயில் சேவை
கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், மதுரையில் இருந்து கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவுவதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த ரெயில்கள் இயக்கம் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்ததைத்தொடர்ந்து, ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், எதிர் திசையில் மதுரையில் இருந்து இதே வழித்தடத்தில் எர்ணாகுளத்திற்கும் இயக்கப்படும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கரூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கும், அங்கிருந்து எதிர் திசையில் இதே வழித்தடத்தில் பாலக்காடுக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த சில மாதங்களாக மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை-மதுரை ரெயில்
இதைத்தொடர்ந்து கடந்த 2ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை-மதுரை, மதுரை-கோவை இடையிலான ரெயில் இயக்க சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
முன் பதிவு இல்லாத இந்த சிறப்பு ரெயில்களில் கோவையில் இருந்து நேற்று முன்தினமும், மதுரையில் இருந்து நேற்றும் இந்த ரெயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கியது.
கோவை-மதுரைக்கு இடையிலான ரெயில் கோவையில் இருந்து தினசரி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம் வழியாக உடுமலைக்கு 3.36 மணிக்கு வந்து சேரும். இங்கிருந்து 3.38 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இரவு 7.40க்கு சென்றடையும். அதேபோன்று மதுரை-கோவை இடையிலான ரெயில், மதுரையில் இருந்து தினசரி காலை 7.20 மணிக்கு புறப்படும் ரெயில் திண்டுக்கல், பழனி வழியாக உடுமலைக்கு பகல் 11.53 மணிக்கு வந்து சேரும். உடுமலையில் இருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக மதியம் 2 மணிக்கு கோவைக்கு சென்று சேரும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட தொடங்கியதால் ரெயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.