பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு
கோவை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
பாலியல் வழக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை ஒரு கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து பணம் மற்றும் நகை பறிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
கோர்ட்டில் ஆஜர்
இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, ஹேரேன் பால், அருண்குமார் என இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மீது 8 பெண்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கோவை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சேலம் மத்திய சிறை மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் கிளைசிறையில் அடைக்கப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி நந்தினிதேவி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றச்சாட்டு பதிவு
ஏற்கனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது இந்த நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்தமுறை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் நேரடியாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.