கோவில்பட்டி முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது
கோவில்பட்டி முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
செண்பகவல்லி அம்மன் கோவில்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூமிநாத சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவை யொட்டி தினமும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 10 மணி சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருக்கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடைக்கு சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். இரவு 7.20 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியை சாமிநாத பட்டர் தலைமையில் ரகுபட்டர் குழுவினர் நடத்தினா். மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியர் காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து வெளிப்பிரகாரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வெளியிலிருந்து தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
சொர்ணமலை கதிரேசன் கோவில்
கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.45 மணிக்கு மேல் கார்த்திகேயர், வள்ளி, தெய்வானையுடன் மணமேடைக்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத்தை சுப்பிரமணிய பட்டர், ஹரி பட்டர். அரவிந்த் ஆகியோர் நடத்தினர்.
சங்கரலிங்க சுவாமி கோவில்
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் வள்ளி, தேவசேனா, கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியை சுப்பிரமணிய ஐயர் நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.