வருகிற 15-ந் தேதி முதல் சென்னை ஐகோர்ட்டுக்குள் வக்கீல்களுக்கு அனுமதி
சென்னை ஐகோர்ட்டுக்குள் வரும் 15-ந் தேதி முதல் வக்கீல்கள் மற்றும் வக்கீல் குமாஸ்தாக்கள் செல்ல அனுமதி அளித்து ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
சென்னை,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை உள்பட அனைத்து கோர்ட்டுகளும் மூடப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னர் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டுவருகின்றன. முக்கிய வழக்குகள் மட்டும் நேரடி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
ஐகோர்ட்டு வளாகத்துக்குள் வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டாலும், கோர்ட்டு அறைகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பெரும்பாலான வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வருகிற 15-ந் தேதி ஐகோர்ட்டில் உள்ள கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் தனபால் கூறியிருப்பதாவது:-
ஐகோர்ட்டு வளாகத்துக்குள் வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்கள் வருகிற 15-ந் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும். வழக்கு தொடர்ந்து தானே ஆஜராகும் மக்கள் அவசியம் தேவைப்படும்போது மட்டும் உரிய அனுமதியுடன் உள்ளே வரலாம். வழக்கு தொடர்ந்தவர்கள், சாட்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.