குமரியில் மேலும் 22 வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேலும் 22 வீடுகள் இடிந்தன. பொய்கை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மேலும் 22 வீடுகள் இடிந்தன. பொய்கை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது.
மழை
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதே போல நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிலும் மயிலாடி மற்றும் ஆரல்வாய்மொழி பகுதியில் பலத்த மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக பெய்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குமரி மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை அதிகபட்சமாக மயிலாடியில் 39.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-14.2, கன்னிமார்-12.4, கொட்டாரம்-14.8, நாகர்கோவில்-18.8, பெருஞ்சாணி-1.8, புத்தன்அணை-2, சுருளகோடு-3.2, பாலமோர்7.2, மாம்பழத்துறையாறு-9.2, ஆரல்வாய்மொழி-20, அடையாமடை-9, குருந்தன்கோடு-2.4, ஆனைகிடங்கு-6.2 மற்றும் முக்கடல்-11.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகள் நிலவரம்
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 730 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 608 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 8 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 18 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 18 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 646 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 18 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் பொய்கை அணையில் இருந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு உபரிநீர் திறக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
வீடுகள் இடிந்தன
மழை காரணமாக ஏற்கனவே பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு மேலும் 22 வீடுகள் இடிந்துள்ளன.
அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகளில் ஒரு பகுதியும் இடிந்துள்ளன. தோவாளை தாலுகாவில் ஒரு வீடு பகுதி அளவும், விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளில் ஒரு பகுதியும் இடிந்துள்ளன. திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதி அளவும் இடிந்திருக்கிறது. கிள்ளியூர் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், 6 வீடுகள் பகுதி அளவும் இடிந்துள்ளன.