சேலத்தில் விடிய, விடிய சாரல் மழை

சேலத்தில் விடிய, விடிய சாரல் மழை

Update: 2021-11-10 20:01 GMT
சேலம், நவ.11-
சேலத்தில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது.
சாரல் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் சில ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பின. பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவமழையின் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் இரவில் கடும் குளிர் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நேற்று காலையிலும் சாரல் மழை தொடர்ந்தது. குறிப்பாக சாலையோர காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் மழையினால் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். குடைகள் பிடித்தவாறு அவர்கள் வியாபாரம் செய்ததை பார்க்க முடிந்தது.
மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகத்துக்கு செல்லக்கூடிய ஊழியர்களும் மழையினால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். சிலர் இருசக்கர வாகனத்தில் குடைகள் பிடித்தவாறு சென்றனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நேற்று பகலில் குளிர்ந்த காற்று வீசியதால் பெண்கள் உள்பட பலர் சுவர்ட்டர் அணிந்து கொண்டு தான் வெளியே வந்தனர். தொடர் மழையால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி அதிகப்பட்சமாக தம்மம்பட்டியில் 52 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- வீரகனூர்-48, ஆத்தூர்-28, பெத்தநாயக்கன்பாளையம்-25, கரியகோவில்-15, கெங்கவள்ளி-13.5, ஏற்காடு-12, ஆணைமடுவு-10, காடையாம்பட்டி-9.8, சேலம்-9.7, சங்ககிரி-9.5, எடப்பாடி-9.4, ஓமலூர்-8, மேட்டூர்-3.8 ஆகும்.
வாழப்பாடி
வாழப்பாடி பகுதியில் பெய்த மழையில் வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குள்ளு (வயது 60) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் ஆடு ஒன்று சிக்கி இறந்தது. வாழப்பாடி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி மகேஸ்வரி (45) என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தாசில்தார் வரதராஜன், வருவாய் ஆய்வாளர்கள் கார்த்திக், சந்திரகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், பெரியசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்