சேலம் முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்

சேலம் முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்

Update: 2021-11-10 19:57 GMT
சேலம், நவ.11-
சேலத்தில் முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
சேலம் மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்களில் நேற்று முன்தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடந்தது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் ஆசிரமத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
திருக்கல்யாணம்
இந்த நிலையில் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் நேற்று மதியம் சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு சிறப்பு யாகம் நடந்தது. இதையடுத்து பெண்கள் உரலில் மஞ்சள் இடித்தனர். தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருக்கல்யாண கோலத்தில் காவடி பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஆசிரமத்துக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய சாமி கோவில், அழகாபுரம் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி கோவில் என மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிச்சிப்பாளையம்
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி உற்சவர் முருகன், வெள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாமிக்கு கங்கன கயிறுகள் கட்டி வேதமந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியம் இசைக்கவும் தீபாராதனையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதேபோல், பெரமனூர் ஆறுமுகன் கந்தசாமி கோவிலிலும் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருமணம் கோலம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பெரமனூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி- கெங்கவல்லி
வாழப்பாடியில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் நேற்று மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பேளூர் வெள்ளிமலை முருகன் கோவில், வாழப்பாடி புதுப்பாளையம் கந்தசாமி கோவில், அத்தனூர்பட்டி, துக்கியாம்பாளையம் முருகன் கோவில்களிலும், முருகபெருமானுக்கு கந்த சஷ்டி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
கெங்கவல்லியில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகபெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்