திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் மேடானபகுதிக்கு செல்லுமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் மேடானபகுதிக்கு செல்லுமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
ஆந்திர மாநில வனப்பகுதி மற்றும் நமது மாவட்டம் முழுமையும் பெய்து வரும் தொடர் மழையினால் ஏரி, குள8்கள்நிரம்பி உள்ளன. ஆறுகளில் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆறு மற்றும் ஏரிகளில் குளிப்பது, துணிகள் துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
மழையின் காரணமாக அனைத்து ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுவதும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் சென்று நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது.
மேடானபகுதிக்கு...
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டத்தில் மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து 1077, 04179-222111, 229008 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டுப்பாட்டு அறையையும், கொரோனா கட்டுப்பாட்டு அறையையும் அரசு கூடுதல் தலைமை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தென்காசி எஸ்.ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.