இளையான்குடி
இளையான்குடி நீதிமன்ற வளாகத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்த தொடக்க விழா நடைபெற்றது. சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துண்டு பிரசுரங்கள் வழங்கி இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் நீதிபதி எம். சுனில் ராஜா தொடங்கி வைத்தார். இதில் இளையான்குடி நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சட்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இலவச சட்ட உதவிகள் எளிதில் தெரிந்து கொண்டு வட்ட சட்ட பணிகள் குழுவில் தங்கள் புகார்களை தெரிவித்து சட்ட உதவிகளை பெற முடியும். பொதுமக்கள் தங்களுக்கான நிவாரண உதவிகள், சட்ட உதவிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை சட்டரீதியாக எளிதில் பெற உதவியாக இருக்கும் என வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான நீதிபதி எம்.சுனில் ராஜா தெரிவித்தார். பிரசார வாகனம் இளையான்குடி, சாலைக்கிராமம் சூராணம், தாயமங்கலம், முனைவென்றி ஆகிய பகுதிகளில் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.