பள்ளிபாளையம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம்‌ மோசடி-அ.தி.மு.க. கிளை செயலாளர், தங்கையுடன்‌ கைது

பள்ளிபாளையம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. கிளை செயலாளர், தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-10 18:23 GMT
நாமக்கல்:
பள்ளிபாளையம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. கிளை செயலாளர், தங்கையுடன் கைது செய்யப்பட்டார்.
அ.தி.மு.க. கிளை செயலாளர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 42). இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அரசுப்பள்ளியில் நூலகர் பணிக்கு தேர்வானதால் ஊராட்சி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 
மேலும், இவர் தனது அண்ணனான ஓடப்பள்ளி அ.தி.மு.க. கிளை செயலாளர் செந்தில்குமாருடன் (46) சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ரூ.24 லட்சம் மோசடி
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை பெற்றுக்கொண்டு, போலியாக பணி நியமன ஆணைகளை கல்யாணி வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகியோர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். 
கைது
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கல்யாணி மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் சிலருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை போலியாக அச்சடித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்யாணி மற்றும் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கல்யாணி சேலம் சிறையிலும், செந்தில்குமார் நாமக்கல் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் தங்கராசுவின் சகோதரர் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்று ஏமாற்றியதால் மனமுடைந்த தங்கராசு, கல்யாணியின் வீட்டின் முன்பு தீக்குளித்து பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்