கோவில்களில் கந்தசஷ்டி விழா: முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்

கோவில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்றதையொட்டி முருகபெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2021-11-10 18:21 GMT
புதுக்கோட்டை:
திருக்கல்யாணம்
கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை எழுந்தருளினர். திருமண வைபம் நடைபெறுவதை போல ஆகம விதிகளின் படி சம்பிரதாயங்கள், வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல திருக்கோகர்ணம் பிரதகாதம்பாள் கோவில், புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
கறம்பக்குடி, திருவரங்குளம்
கறம்பக்குடி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 7 நாட்களாக நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முருகன் பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மேளதாளங்கள் முழங்க முருகபெருமான், வள்ளி தேவசேனா திருமணம் நடந்தது.இதையடுத்து வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடுமலை அழகர் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானை கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்