விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.64 ஆயிரம் மோசடி
மேலாளர் பேசுவதாக கூறி விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.64 ஆயிரம் சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டது
திண்டுக்கல்:
விவசாயியிடம் மோசடி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 60). விவசாயி. கடந்த மாதம் 27-ந்தேதி இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் என்று அறிமுகம் செய்தார். மேலும் சடையப்பனின் வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும், அதற்கு வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டு உள்ளார்.
அதை உண்மை என நம்பிய சடையப்பன், தனது வங்கி கணக்கு விவரத்தை தெரிவித்தார். அதன்பின்னர் சடையப்பனின் செல்போன் எண்ணுக்கு வந்த ஒருமுறை பயன்படுத்தும் கடவுஎண்ணையும் (ஓ.டி.பி.) அந்த நபர் கேட்டு தெரிந்து கொண்டார். இதையடுத்து சடையப்பனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.64 ஆயிரத்து 411 எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்டார்.
ஆன்லைனில் செல்போன் வாங்க...
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம், அவர் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சடையப்பனின் வங்கி கணக்கை பயன்படுத்தி ஆன்லைனில் செல்போன் வாங்குவதற்கு பணம் செலுத்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட சைபர் கிரைம் போலீசார் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து சடையப்பனின் வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்ட ரூ.64 ஆயிரத்து 411-ஐ போலீசார் மீட்டனர். மேலும் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே நேற்று சடையப்பனை நேரில் வரவழைத்து, அவருடைய பணத்தை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஒப்படைத்தார்.