செல்போன் குறுந்தகவலை நம்பி ரூ.6 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்

செல்போன் குறுந்தகவலை நம்பி ஓய்வுபெற்ற ஆசிரியர் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார்.

Update: 2021-11-10 18:04 GMT
செல்போன் குறுந்தகவலை நம்பி ஓய்வுபெற்ற ஆசிரியர் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார்.
வீட்டிலிருந்தே வேலை
ஈரோடு பழையபாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
என்னுடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ‘வீட்டிலிருந்தே வேலை செய்து தினமும் ரூ.2 ஆயிரம் சம்பாதிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நானும் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு தகவல் அனுப்பினேன்.
அதற்கு அவர்கள் ஒரு இணையதள முகவரி கொடுத்து அதில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அதன்படி நானும் பதிவு செய்தேன். இதையடுத்து ரூ.200-க்கு ரீசார்ஜ் செய்து ரூ.100 சம்பாதித்து ரூ.300 திரும்ப பெறலாம். ரூ.500-க்கு ரீசார்ஜ் செய்து, ரூ.650 திரும்ப பெறலாம். இவ்வாறாக ரூ.50 ஆயிரம் வரை திட்டங்களை கூறினர்.
ரூ.6 லட்சம்
அதன்படி முதல் நாளில் ரூ.100 கணக்கிலும், அடுத்து வந்த நாட்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் ரீசார்ஜ் செய்தும் பணம் பெற்றேன். கடந்த மாதம் 21-ந்தேதி ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் வரை ரீசார்ஜ் செய்து, ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பெற விண்ணப்பித்தேன். 72 மணி நேரத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றனர்.
அதன் பின்னர் கடந்த மாதம் 22-ந்தேதி ரூ.10 ஆயிரம் ரூபாய் ரீசார்ஜ் செய்து ரூ.13 ஆயிரம் வரை திரும்ப பெற்றேன். 23-ந்தேதி ரூ.10 ஆயிரத்தில் தொடங்கி ரூ.3 லட்சம் வரை ரீசார்ஜ் செய்து முடித்து ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் பெற விண்ணப்பித்தேன். அப்போதும் தொகை அதிகமாக இருப்பதால் 72 மணி நேரத்துக்கு பின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் 9 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் இதுவரை வரவில்லை. பண பரிமாற்றம் முழுவதும் வங்கி கணக்கில் நடந்தது. எனவே நான் இழந்த ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
-------------

மேலும் செய்திகள்