கடலூரில் 4 ஆயிரம் கோழி குஞ்சுகள் செத்தன
கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் 4 ஆயிரம் கோழி குஞ்சுகள் செத்தன.
கடலூர்,
கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 58). இவர் அந்த பகுதியில் நாட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் 7,500 கோழி குஞ்சுகள் விட்டு வளர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை பெய்து வந்த தொடர் மழையால் கோழி குஞ்சுகள் கொத்து, கொத்தாக செத்து மடிய தொடங்கியது. இதுவரை சுமார் 4 ஆயிரம் கோழி குஞ்சுகள் செத்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காத்தமுத்து, இது பற்றி கடலூர் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கால்நடை மருத்துவ அலுவலர்கள் வந்து, செத்துக்கிடந்த கோழி குஞ்சுகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது கடுங்குளிரால் கோழி குஞ்சுகள் செத்து விட்டதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் செத்து கிடந்த கோழி குஞ்சுகள் அந்த பகுதியில் பள்ளம் தோண்டி மொத்தமாக புதைக்கப்பட்டன.