நாகையில் பல மணிநேரம் வெளுத்து வாங்கிய கனமழை குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் 2-வது நாளாக பொதுமக்கள் கடும் அவதி

நாகையில் பல மணிநேரம் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக கடும் அவதிப்பட்டனர்.

Update: 2021-11-10 16:45 GMT
நாகப்பட்டினம்:-

நாகையில் பல மணிநேரம் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக கடும் அவதிப்பட்டனர். 

வெளுத்து வாங்கிய மழை

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை நீடித்து வருகிறது. இதில் சில நாட்களில் விடிய, விடிய சாரல் மழை பெய்து உள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து நாகை மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மழை வெளுத்து வாங்கியது.
ஏற்கனவே வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாத நிலையில் மேலும் மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். தண்ணீரில் மூழ்கி இருக்கும் சம்பா இளம் பயிர்கள் அழுகி கடும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் விரக்தியுடன் கூறுகிறார்கள். 

வெள்ளக்காடாக மாறிய நாகை

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் அதிகாலை பெய்ய தொடங்கிய மழை மாலை 6.30 மணி வரை நீடித்தது. அதன் பிறகு விட்டு, விட்டு மழை தூறல் விழுந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை நாகை பகுதியில் மழை இல்லை. 
நேற்று முன்தினம் பல மணிநேரம் நீடித்த கன மழையால் நாகை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், வ.உ.சி. சாலை, பப்ளிக் ஆபீஸ் சாலை, சிவசக்தி நகர், நம்பியார் நகர், அக்கரைப்பேட்டை மெயின் சாலை உள்ளிட்ட நகர பகுதிகள் வெள்ளக்காடுபோல காட்சி அளித்தன. 

2-வது நாளாக அவதி

தாழ்வான பகுதிகளான பாப்பாக்கோவில், கருவேலங்கடை, சிவசக்தி நகர், பாலையூர், நாகூர் எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடியாததால் நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
நேற்று காலை மழை விட்டிருந்த நேரத்தில் விவசாயிகள் வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை தொடர்ந்து நீடிப்பதால் வயல்களில் இருந்து மழைநீரை வெளியேற்றுவது சிரமமாக இருப்பதாக விவசாயிகள் கூறினர். 

வேளாங்கண்ணி

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள செபஸ்தியார் நகரில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியை மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சூழ்ந்து உள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
வேளாங்கண்ணி பஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம், மார்க்கெட், பேராலய தியான மண்டபத்திற்கு செல்லும் பாதை, ஆர்ச் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். 

கடல் சீற்றம்

வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை எந்திரம் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
வேளாங்கண்ணியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் கடற்கரை தெற்கு பகுதியில் அமைந்துள்ள போலீஸ் கண்காணிப்பு கோபுரம், கடல் அரிப்பால் சாய்ந்தது. 

திட்டச்சேரி

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த ஜஹபர் சாதிக் (வயது 44) என்பவருடைய வீட்டின் ஒரு பக்க சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்தது. அதேபோல் திட்டச்சேரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தேவிகா (52), அதே பகுதியை சேர்ந்த செல்லாச்சி (65) ஆகியோரின் வீடுகளும் சேதம் அடைந்தன. திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கனமழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, விவசாய சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் ஆலத்தூர், அருள்மொழிதேவன், திருப்புகலூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, புதுக்கடை, வாழ்மங்கலம், உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வருவாய், வேளாண் துறையினர் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தண்ணீர் வடிந்த பின்னர் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க வேண்டும்’ என்றனர். 

கீழ்வேளூர்

    கீழ்வேளூர் வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம் சிக்கல், ஆழியூர், சங்கமங்கலம், ஆவராணி, புதுச்சேரி, அகரகடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வடகரை, கோகூர், தீபாம்பாள்புரம், ஆத்தூர் உள்ளிட்ட ஊர்களில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருப்பூண்டியில் அதிகபட்ச மழை

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கனமழை காரணமாக மாவட்டத்தில் 30 கூரை வீடுகள், 2 கான்கிரீட் வீடுகள் என 32 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு சென்டி மீட்டர் அளவுகளில் வருமாறு:- 
நாகை-30, வேதாரண்யம்-25, தலைஞாயிறு-24. மாவட்டத்தில் சராசரியாக 27 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்