2500 ஏக்கரில் கண்வலி விதை சாகுபடி பாதிப்பு
2500 ஏக்கரில் கண்வலி விதை சாகுபடி பாதிப்பு
மூலனூர்,
மூலனூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 2500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கண்வலி விதை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளின் வேர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கண்வலி விதை சாகுபடி
மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கண்வலி சாகுபடி பிரதானமாகும். மூலனூர், கிளங்குண்டல், எடைக்கல்பாடி, குமாரபாளையம், பொன்னிவாடி, போளரை பகுதியில் 2500 ஏக்கர் பரப்பளவில் கண்வலி மூலிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மூலனூர் பகுதியில் தொடர் மழை பெய்துவருகிறது.
இதனால் கண்வாலி செடி சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டம் மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பூக்கள் உதிர்ந்து விட்டன. பிஞ்சுகள் அழுகி விட்டது. மொத்தத்தில் செடி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கண் வலி மூலிகை விவசாய சங்க தலைவர் சுள்ளிபெருக்குபாளையம் லிங்குசாமி கூறும்போது:-
இழப்பீடு
ஒரு கிலோ கண்வலி விதை ரூ. 2,500-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் கண்வலி செடி சாகுபடி செய்ய 500 முதல் 750 கிலோ கண்வலி கிழங்கு தேவைப்படுகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கிழங்கு ரூ.450-க்கு விற்கப்பட்டது. அதன்படி ஒரு ஏக்கருக்கு விதைப்பதற்கு கிழங்கு மட்டும் ரூ. 3 லட்சம் தேவைப்படுகிறது. பிறகு அதற்கு கம்பி வேலி அமைக்கவும் உரம் மருந்து வேலையாட்கள் கூலி மற்றும் பராமரிப்பு என ஒரு ஏக்கர் கண்வலி பயிர் சாகுபடி செய்ய ரூ.2 லட்சம் வரை செலவாகிறது.
தற்போது ஒரு கிலோ கண்வலி வதை ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கண்வலி பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கண்வலி பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலமாக கண்வலி விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.