பெதப்பம்பட்டி அருகே பி.ஏ.பி. கால்வாய் சேதமடைந்து கிடக்கிறது
பெதப்பம்பட்டி அருகே பி.ஏ.பி. கால்வாய் சேதமடைந்து கிடக்கிறது
குடிமங்கலம்,
பெதப்பம்பட்டி அருகே பி.ஏ.பி. கால்வாய் சேதமடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி கால்வாய்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் செல்லும் நிலையில் கிளை கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
பி.ஏ.பி. கிளைகால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது மட்டுமே அவசர கதியில் சீரமைக்கப்படுகிறது. கால்வாய்களில் புதர்மண்டி கிடைப்பது மட்டுமல்லாமல், சீமைகருவேலமரங்களின் வேர்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் பல இடங்களில் கால்வாய்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.
சீரமைக்க கோரிக்கை
உடுமலை-செஞ்சேரிமலை பிரதான சாலையில் இருந்து பொள்ளாச்சி- தாராபுரம் பிரதான சாலை வரை பூலாங்கிணறு கிளைகால்வாய் மூலம் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி கால்வாயையொட்டி மரங்கள், சீமைகருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. மரங்கள் கால்வாய்களை பெயர்த்து விடுகிறது. இதனால் தண்ணீர் திறந்து விடும் போது தண்ணீர் வீணாகி விடுகிறது.
இதனால் கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் சீமைக் வெட்டி கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் போது மட்டும் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ளாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.