900 ஆண்டு பழமையான அய்யனார் சிலை கண்டெடுப்பு
900 ஆண்டு பழமையான அய்யனார் சிலை கண்டெடுப்பு
பழந்தமிழ் மக்கள் உள்நாட்டு வணிகத்துடன் மேலை நாடுகளுடனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகம் மேற்கொண்டு வருவதாக வரலாற்று ஆய்வு தெரிவிக்கிறது. அந்த காலத்தில் கள்வர்களுக்கு பயந்து வணிகர்கள் தம் பண்டங்களை விற்பனைக்கு எடுத்து செல்லும் போது கூட்டம் கூட்டமாக செல்வார்கள். இவ்வாறு செல்லும் வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். அப்படி அய்யனாரை வழிபட்டால் அவர் துணை இருப்பதாக ஐதீகம்.
திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த இடுவாய் நடராஜ், சு.வேலுச்சாமி, க.பொன்னுசாமி மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மங்கலம் அருகிலுள்ள பூமலூர் கிராமத்தில் 900 ஆண்டு பழமையான அய்யனார் சிற்பம் ஒன்றையும் 600 ஆண்டுகள் பழமையான பல்லக்கில் இருக்கும் தாய் தெய்வச்சிற்பம் ஒன்றையும் கண்டறிந்துள்ளனர்.
இதைப் பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:- சங்க காலத்தில் வீரவணக்கத்தின் அடிப்படையில் தோன்றிய தெய்வ வழிபாடு இன்றும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த அய்யனார் சிலையானது 70 செ.மீ அகலம், நிலமட்டத்திற்கு மேல் 80 செ.மீ உயரம் கொண்டதாக உள்ளது. கொண்டது. பீடத்தின் மீது அய்யனார் அமர்ந்து வலது காலை மடித்து இடது காலைத்தொங்கவிட்டு அதன் மேல் தன் இடது கையை வைத்து சுகாசனத்தில் உள்ளார்.
வலது கையில் செண்டாயுதம் பிடித்த படியும் மார்பின் இடையே வீரத்தின் அடையாளமான சன்னவீரம் அணிந்து, தலையில் மணிமுடியான கிரீடமகுடம் சூடியிருக்கிறார். இடையில் கொசுவத்துடன் கூடிய ஆடை அணிந்துள்ளார். இவரின் இரு பக்கங்களிலும் பூரணை, புஷ்கலை என்னும் இரு தேவிகள் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஐயனாருக்கு மேலே பக்கத்திற்கு ஒருவராக 2 பணிப்பெண்கள் வெண்சாமரம் வீசும் நிலையில் உள்ளனர். சிற்ப இலக்கணப்படி அய்யனார் சிற்பம் அதமதசதாள அளவீட்டின் படி அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைப்பை வைத்து பார்க்கும் போது இது சுமார் 900 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
இதேவளாகத்தில் 80 செ.மீ உயரமும், 90 செ.மீ அகலமும் கொண்ட ஒரு தாய் தெய்வச்சிற்பம் பல்லக்கில் அமர்ந்து பயணிப்பது போல் பல்லக்கு அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழக சிற்பக் கலைக்கு ஒரு தனிச்சிறப்பு ஆகும். இதில் பக்கத்துக்கு 3 பேர் வீதம் மொத்தமாக 6 பேர் பல்லக்கை சுமந்து செல்வது போலும் அவ்வாறு பயணிக்கும்போது பாதுகாப்புக்குச்செல்லும் வீரர்கள் வில் அம்பு ஏந்தியும் கையில் குறுவாள், ஈட்டி, அறுவாள், சொட்டைமுனை ஆயுதம் போன்றவற்றை பிடித்த படியும் சிற்பங்கள் 3 பக்கங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்துப்பொறிப்பு இல்லாத இச் சிற்பம் 600 ஆண்டு பழமையானதாகும். மேலும் இங்கு கிடைக்கும் தொல்லியல் சான்றுகளான பெருங்கற்கால சின்னங்கள் மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் மூலமாகவும் பூமலூர் கிராமம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததை நாம் அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.