விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு மீண்டும் உடைப்பு தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால் விவசாயிகள் கவலை

விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு மீண்டும் உடைந்து சேதமடைந்தது. இதனால் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2021-11-10 04:47 GMT
விழுப்புரம், 

புதிய அணைக்கட்டு

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதியில் புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்டது.

2114.14 ஏக்கர் நிலங்கள் பாசனம்

அணைக்கட்டின் இருபுறமும் பக்கத்திற்கு 6 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 1,46,215 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மதகுகள் மூலம் வினாடிக்கு 5105 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. 
இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு தென்பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்களும் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் கட்டப்பட்டது. 

சில மாதங்களிலேயே உடைந்தது

இந்த நிலையில் அணைக்கட்டு திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனதிரிமங்கலம் பகுதியில் அணைக்கரை பலமாக போடப்படாததால் கரைப்பகுதியில் உள்புறமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவில் கசிந்து வெளியேறியதோடு 3 மதகு ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. 
அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து வந்து சில வாரங்களிலேயே உடைப்பு ஏற்பட்டதால் 2 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அதிருப்தியடைந்தனர். இந்த அணைக்கட்டு உடைப்பு விவகாரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நீர்வரத்து

இதற்கிடையே தற்போது கடந்த சில வாரங்களாக தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் தளவானூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது
இதனால் அணைக்கட்டு மேலும் சேதமடையாமல் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறையினர், அந்த அணைக்கட்டின் மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். அணைக்கட்டின் வலதுபுற மதகுகள் முற்றிலும் உடைந்துள்ளதால் அங்கு தண்ணீர் செல்லாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி, இடதுபுற மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.

அணைக்கட்டு மீண்டும் உடைந்து சேதம்

இந்நிலையில் கனமழையின் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்த சூழலில் நேற்று அதிகாலை தளவானூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவ்வாறு அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அணைக்கட்டின் இடதுபுற கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் அணைக்கட்டின் கரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது. நேரம் செல்ல, செல்ல அணைக்கட்டின் கரைப்பகுதி கான்கிரீட் சுவர்களும் உடைந்ததால் 3 மதகுகளும் அப்படியே சாய்ந்தது.

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மதகு

தொடர்ந்து, தண்ணீரின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மற்ற 2 மதகுகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் அபாயத்தில் உள்ளது. அணைக்கட்டு திறக்கப்பட்டு ஓராண்டிலேயே 2-வது முறையாக உடைந்து சேதமடைந்ததால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் அவை கடலில் வீணாக சென்று கலக்கிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர்.

மேலும் செய்திகள்