அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-09 22:20 GMT
விருதுநகர், 
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
 ஆய்வு 
விருதுநகர்அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைகட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை பெய்ததால் நீர்வள ஆதாரத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறப் பகுதிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேரடி ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மதகுகளின் உறுதித்தன்மை, வரத்து கால்வாய்கள், கண்மாய்கள் உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர் அவர் கூறியதாவது:-
 வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அனைத்துப்பகுதிகளிலும் பரவலாக பெய்து வரும்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆனைக்குட்டம் அணைப்பகுதி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 நடவடிக்கை
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீர்வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீரைவெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள் மழை பாதிப்பு குறித்து உடனடியாக உதவி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
 இவ்வாறு கலெக்டர் கூறினார். 
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியம்,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்