குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் கிடைக்கும் - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் கிடைக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2021-11-09 21:44 GMT
பெங்களூரு:

கண்கள் தானம்

  பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மிண்டோ அரசு கண் ஆஸ்பத்திரியில் 125-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, அந்த விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கண்களை தானம் செய்து 4 பேருக்கு பார்வையை கொடுத்துள்ளார். தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியால் ஒருவரின் கண்கள் 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. நாட்டில் 4 கோடி கண் பார்வையற்றவர்கள் உள்ளனர். அதனால் கண்களை தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

கர்நாடகத்திற்கு பெருமை

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறியுள்ளார். நானும் கண்களை தானம் செய்ய முடிவு செய்து அதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். கண்கள் தானம் குறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த வேண்டியது அவசியம். கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, மிண்டோ, விக்டோரியா ஆஸ்பத்திரிகள் அந்த நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டன.

  ஆனால் தற்போது விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களின் முயற்சியால் இந்த மிண்டோ கண் மருத்துவமனை 125-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இத்தகைய தரமான கண் மருத்துவமனை இருப்பது கர்நாடகத்திற்கு பெருமை.

அறுவை சிகிச்சை

  பிளேக் நோய் முதல் கொரோனா வரை பல்வேறு நோய்களை தடுப்பதில் இந்த மிண்டோ ஆஸ்பத்திரி முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் புறநோயாளிகள் பிரிவுக்கு தினமும் 800 பேர் வருகிறார்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனா முதல் டோஸ் 89 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. 48 சதவீதம் பேருக்கு 2-வது டோஸ் போட்டு முடிக்கப்பட்டுள்ளது.

  முழுமையான நோய் எதிர்ப்பு உருவாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் இதுவரை 6.75 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா முழுமையாக நம்மை விட்டு விலகி செல்லும் வரை நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க உள்ளது. குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். குழந்தைகளில் முன்னுரிமை பிரிவினர் பட்டியலை அரசு தயாரித்துள்ளது. அடுத்த வாரம் இந்த தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
  இவ்வாறு சுதாகர் பேசினார்.

மேலும் செய்திகள்