புனித் ராஜ்குமார் ரசிகர்கள் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2021-11-09 21:40 GMT
பெங்களூரு:

புனித் ராஜ்குமார் மரணம்

  கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். அப்பு, பவர் ஸ்டார், யுவரத்னா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த மாதம்(அக்டோபர்) 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூரு கோரகுண்டேபாளையாவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

  அவரது நினைவிடத்தில் தினமும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அவரது குடும்பத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

2 ஆயிரம் கிலோ கோழி இறைச்சி

  அதன்படி நேற்று பெங்களூரு அரண்மனை மைதானத்தில் புனித் ராஜ்குமாரின் ரசிகர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடு பணிகள் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. 30 ஆயிரம் ரசிகர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த அன்னதான நிகழ்ச்சிக்காக 25 ஆயிரம் கிலோ அரிசி, 100 கிலோ தக்காளி, 50 கிலோ வெங்காயம், 8 ஆயிரத்து 500 கோழி முட்டைகள், 2 ஆயிரம் கிலோ கோழி இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் வாங்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் காலையில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் சைவம் மற்றும் அசைவ உணவுகளை தயாரித்து வந்தனர்.

  சரியாக நேற்று காலை 11 மணியளவில் அன்னதான நிகழ்ச்சி தொடங்கியது. இதில் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். அரண்மனை மைதான நுழைவு வாயில் பகுதியில் இருந்து அன்னதானம் நடந்த இடம் வரை ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களை போலீசார் வரிசையாக அன்னதானம் சாப்பிட அனுப்பி வைத்தனர்.

ரசிகர்கள் ரத்த தானம்

  சைவ உணவு சாப்பிடுபவர்கள் மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. சைவ உணவில் அரிசி சாதம், சாம்பார், வடை, வாழைப்பழம் உள்ளிட்டவையும், அசைவ உணவில் நெய் சோறு, கபாப், சிக்கன் உள்ளிட்டவைகளும் இடம் பெற்று இருந்தன. அன்னதானம் தொடங்கி ஒரு மணி நேரத்தில் அங்கு புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, புனித் ராஜ்குமாரின் அண்ணனும், நடிகருமான சிவராஜ்குமார் ஆகியோர் வந்தனர். அவர்களும் தங்களது கையால் ரசிகர்களுக்கு உணவு பரிமாறினர்.

  அதன்பின்னர் அரண்மனை வளாகத்தில் நடந்த ரத்ததான முகாமில் சிவராஜ்குமார் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார். இதுபோல அன்னதானத்தில் கலந்து கொண்ட ரசிகர்களும் ரத்ததானம் செய்தனர். இந்த அன்னதான நிகழ்ச்சியையொட்டி பெங்களூரு அரண்மனை மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாகனங்களை நிறுத்தவும் போலீசார் இடம் ஒதுக்கி கொடுத்து இருந்தனர்.

மகனை இழந்தது...

  அன்னதான நிகழ்ச்சி குறித்து சிவராஜ்குமார் கூறுகையில், ‘‘ரசிகர்கள் தான் எங்களது கடவுள். புனித் ராஜ்குமார் தனது ரசிகர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

  அவரது ஆசையை நிறைவேற்ற இந்த அன்னதானத்தை செய்து உள்ளோம். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அப்பு நம்முடன் இல்லை என்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் என்னை விட வயதில் சிறியவர். அவர் எனது மகனை போன்றவர். மகனை இழந்த துக்கத்தில் நான் தவிக்கிறேன்’’ என்றார். இந்த அன்னதானம் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை 5 மணி நேரம் நடந்தது.

மேலும் செய்திகள்