கோவில்களில் நடைெபற்ற சூரசம்ஹாரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் நடைெபற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி முருகன் கோவில்கள், சிவன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். கந்தசஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹாரத்தையொட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சூரபத்மனை வேல் கொண்டு வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக கோவில் வெளிப்பகுதியில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு நேற்று மழையின் காரணமாக கோவில் உள் பிரகாரத்தில் நடைபெற்றது.
பிரகதாம்பாள் கோவில்
இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், குமரமலைமுருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கறம்பக்குடி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. தினமும் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 6-வது நாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சூரபத்மனை முருக பெருமான் வேல்கொண்டு வதம் செய்தார். அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். தொடர்ந்து முருகபெருமானுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொட்டும் மழையிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.