தொடர் மழையால் 41 வீடுகள் சேதம்; பருத்தி, மக்காச்சோள வயல்கள் வெள்ளக்காடானது
தொடர் மழையால் 41 வீடுகள் சேதமடைந்தன. பருத்தி, மக்காச்சோள வயல்கள் வெள்ளக்காடானது.
தாமரைக்குளம்:
வீடுகள் சேதம்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் சராசரியாக 188 மில்லி மீட்டர் மழையும், இந்த மாதத்தில் இதுவரை 230 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் 41 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 2 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
இதேபோல் செந்துறை ஒன்றியத்தில் 9 குடிசைகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 13 குடிசைகளும், அரியலூர் ஒன்றியத்தில் 7 குடிசைகளும் பகுதியாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவுப்பொருட்களும், தங்குவதற்கு இடமும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரியலூரில் நேற்று காலை முதலே தூறலாக மழை பெய்தவாறு இருந்தது. வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக லேசான மற்றும் பலத்த மழையும், பனிப்பொழிவு போன்று விட்டு விட்டும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர் திடீரென மழை பெய்தது. பின்னர் மழையின் வேகம் குறைந்து சாரல் மழையாக தொடர்ந்து விட்டுவிட்டு பெய்தது. இதனால் மிகுந்த குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால், குளிர்பிரதேசம் போன்று காட்சி அளித்தது. மாலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த மழை பெய்தது. ஜெயங்கொண்டம் அருகே நேற்று பெய்த மழை காரணமாக கல்லேரி கிராமத்தில் வசிக்கும் பெர்னத்மேரி சூசைமுத்து என்பவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு கிராமங்களில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி தூய்மைப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
வெள்ளக்காடான வயல்கள்
மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சுக்கிரன் ஏரிக்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழைக்காலங்களில் வாய்க்கால்களில் வரக்கூடிய மழைநீர் அருகில் உள்ள வயல்வெளிகளில் புகுந்து சாகுபடி நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதனால் சின்ன பட்டக்காடு, பெரிய பட்டக்காடு, வல்லகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருத்தி, மக்காச்சோள வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிர்கள் அழுகும் நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடையார்பாளையம்
உடையார்பாளையம் பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் உடையார்பாளையத்தில் செக்கான்குட்டை ஏரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளன. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் விவசாயிகள் வயலுக்கு சென்று வேலை செய்ய முடியாமலும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமலும் தவித்தனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் செல்ல முடியாமலும், கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாமலும் சிரமப்பட்டனர்.
மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றபோதும், பள்ளி முடிந்து திரும்பி வீட்டிற்கு வந்தபோதும் சிரமப்பட்டனர். உடையார்பாளையம், கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார் சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, பருக்கல், காடுவட்டாங்குறிச்சி, நடுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.