சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்
சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அரங்கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வடக்குத்தெருவில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் வீதியில் நடக்க முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும், நேரில் சென்று முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்று அப்பகுதி மக்கள் நெல் நாற்றுகளை கொண்டு வந்து வீதிகளில் நடவு செய்து நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவே வீதியில் நாற்று நடும் போராட்டம் நடத்தினோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடக்குத் தெருவில் கான்கிரீட் அல்லது தார் சாலை அமைத்து தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் விரைவில் சாலை அமைத்துத்தர வேண்டும் என்றும், அவ்வாறு அமைத்துத் தரவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.