மதுரகாளி அம்மன் உபகோவில்களில் மீண்டும் சாமி சிலைகள் உடைப்பு

மதுரகாளி அம்மன் உபகோவில்களில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன.

Update: 2021-11-09 19:40 GMT
பெரம்பலூர்:

சிலைகள் உடைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரியசாமி மலை அடிவாரத்தில் பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலுடன் இணைந்த காட்டுகோவில்கள் ஆகும். கடந்த மாதம் 6-ந்தேதி பெரியசாமி கோவிலில் 10 அடி உயரம் கொண்ட பெரியசாமி சிலை உள்பட 9 சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை உள்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட 5 சிலைகளும் என மொத்தம் 14 சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து 7-ந் தேதி சிறுவாச்சூரில் உள்ள நாயுடு மகாஜன சங்கத்திற்கு சொந்தமான பெரியாண்டவர் கோவிலில் இருந்த 13 கற்சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சித்தர் கோவிலில் மயில் சிலையை உடைத்து சேதப்படுத்தியதாக சென்னை கே.கே.நகரை சேர்ந்த வெங்கடகிருஷ்ணனின் மகன் நாதன் (வயது 37) என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
9 சிலைகள் சேதம்
சிறையில் அடைக்கப்பட்ட நாதன் உணவு சாப்பிடாமல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். மேலும் கடந்த 27-ந்தேதி பெரியசாமி கோவிலில் 5 சிலைகளும், செங்கமலையார் கோவிலில் 13 சிலைகளும் என, சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 18 சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் பெரியசாமி கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 15 அடி உயரம் கொண்ட குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாக கன்னி சிலை, பெருமாள் கோவிலில் 5 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயரமுள்ள பொன்னுசாமி சிலை உள்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 9 சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
கோரிக்கை
ஏற்கனவே மதுரகாளியம்மன் உபகோவில்களில் 2 முறை உள்பட மொத்தம் சிறுவாச்சூரில் 3 முறை நடந்த சிலை உடைப்பு சம்பவங்கள் சிறுவாச்சூர் கிராம மக்கள், மதுரகாளியம்மன் கோவில் பூசாரிகள், கோவில் திருப்பணி தன்னார்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போது 4-வது முறையாக நடந்த சிலைகள் உடைப்பு சம்பவம் சிறுவாச்சூர் பக்தர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவாச்சூரில் தொடர்ந்து சிலைகள் உடைப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்