கழுத்தை கயிற்றால் இறுக்கி மூதாட்டி கொடூரக்கொலை
கூடங்குளம் அருகே, வீட்டில் தூங்கிய மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே, வீட்டில் தூங்கிய மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ளது திருவம்பலபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 90). இவர்களது மகன் மாடசாமி, விவசாயி.
வேலாயுதம் ஏற்கனவே இறந்து விட்டார். வள்ளியம்மாள் தனது மகன் மாடசாமியுடன் வசித்து வந்தார். மாடசாமி வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வள்ளியம்மாள் குடியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்று விட்டனர்.
கொடூரக்கொலை
நேற்று காலையில் வள்ளியம்மாள் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாடசாமி தாய் வள்ளியம்மாள் அறைக்கு சென்றார். அப்போது அந்த அறை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வள்ளியம்மாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த மாடசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
வலைவீச்சு
வள்ளியம்மாள் உடல் அருகே கயிறு கிடந்தது. அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. எனவே, மர்ம நபர்கள் இரவில் வள்ளியம்மாள் அறைக்கு சென்று கயிற்றால் கழுத்தை இறுக்கி இந்த பயங்கர கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளை மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ய காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் வள்ளியம்மாள் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கிராமத்தில் மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.