திருட்டு

பெண்ணிடம் 21 பவுன் நகை அபேஸ்

Update: 2021-11-09 18:56 GMT
மதுரை, 
மதுரையில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 21 பவுன் நகையை பறித்து சென்றனர்.
போலீஸ் போல் நடித்து
மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பொற்செல்வி (வயது 54). சம்பவத்தன்று காலை இவர் முனிச்சாலை மெயின் ரோடு பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது டிப்டாப் உடையணிந்த 2 பேர் அவரை வழிமறித்து தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பொற்செல்வியிடம் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. நீங்கள் இவ்வளவு நகையை அணிந்து சென்றால் அதனை யாராவது அபகரித்து சென்று விடுவார்கள். எனவே நகையை கழற்றி கொடுங்கள். நாங்கள் காகிதத்தில் மடித்து கொடுக்கிறோம் அதனை நீங்கள் வீட்டில் சென்று அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினர்.
21 பவுன் அபேஸ்
அவர்களை போலீஸ் என்று நம்பிய பொற்செல்வி அவர் அணிந்திருந்த வளையல், சங்கிலி என 21 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். அதனை அவர்கள் வாங்கி காகிதத்தில் மடித்து கொடுப்பது போல் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். பொற்செல்வி வீட்டிற்கு சென்று காகிதத்தை பிரித்து பார்த்த போது அதில் நகை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட டிப்-டாப் ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்